நமது ஈஸ்வராலயம் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருநாமத்தால் தொடங்கப்பட்டுள்ளது. அவர் கர்நாடகா மாநிலத்தில் ஈஸ்வரமங்களம் என்ற கிராமத்தில் பிறந்தார். பிறந்து சில மாதங்களிலேயே அவரது தந்தையார் காலமானார். பின் அவரது ஆரம்பக் கல்வி காலகட்டத்தில் அவரது தாயாரும் மரணமடைந்தார். இவ்வாறு எந்த ஒரு துணை இல்லாமல் தனித்து விடப்பட்ட அவர், அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று கடுமையாகத் தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவரது ஆன்மா அவரது உடலை விட்டுப் பிரிந்தது. அதே சமயத்தில் அவரது உடம்பில்அற்புத நிகழ்வாக , மற்றொரு புனித ஆத்மா உள்ளே நுழைந்தது. அந்த புனித ஆத்மாவானது சூரியனின் புனித ஆத்மா ஆகும். பின்பு அவரது 16வது வயதில், தென்னிந்தியாவில் உள்ள புனிதத்தலமான பழனி வந்தடைந்தார். ஈஸ்வரபட்டர் அங்கு சிந்தை கலங்கிய நபராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, பல்வேறு மனிதர்களுக்குப் பல அற்புதங்களையும், சுகங்களையும் அளித்து மக்களை ஞானவழியில் கொண்டு சேர்ப்பதற்கு, ஞானகுரு “வேணுகோபால் சுவாமிகள்” மற்றும் “திருமதி.ராஜம்மாள் பாலசுப்ரமணியன்” ஆகியோரைக் கருவியாகப் பயன்படுத்தி சத்தியத்தின் சக்தி நிலையை வெளிப்படுத்தினார். ஈஸ்வரபட்டர் தனது ஸ்துல உடலை உதிர்த்து விட்டு காரண பிரபஞ்ச லோகத்திற்குச் சென்றுஅங்கிருந்து கொண்டு உலக மக்களுக்கு ஆன்ம நலம் உண்டாக அருள் புரிந்து கொண்டு இருக்கிறார். அவரது ஸ்துல உடலானது இன்றும் ஜீவசமாதி நிலையில் பழனியில் உள்ளது.